உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் ரோபோ வாகனம்!

அமெரிக்காவில் ரோபோ ஒன்று வீடுகளுக்கே சென்று மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் வகையில் அறிமுகமாகிறது.

இணையதளத்தின் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கு கொண்டுவரும் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் நடமாடும் மளிகைக்கடை என்ற பெயரில் ரோபோ மார்ட் என்ற புதிய நிறுவனம் பிரத்தியேக சேவை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன் படி, 12 அடி நீளமும், 6 அடி உயரமும் கொண்ட நடமாடும் கடையை ஆப் மூலம் அழைத்தால், அது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் பொருட்களை எடுத்து வரும்.

ஆப் மூலம் அதன் கதவைத் திறந்து, தேவையான பொருட்களை எடுத்துவிட்டால், மின்னஞ்சல் மூலம் அதற்கான ரசீது கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், சூடான உணவு உள்ளிட்டவற்றை தேவைப்படும்போது அருகருகே உள்ள கடைகளுக்குச் சென்று 500 கிலோ உணவுப்பொருட்கள் வரை நிரப்பிக் கொள்ளும்.

முதற்கட்டமாக பாஸ்டனில் அறிமுகமாகும் இந்த சேவை தானியங்கி ரோபோ வாகனம் என்பதால், ஓட்டுநர் உதவியின்றி பொது சாலையில் பயணிக்க அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.