ஊடகங்கள் உண்மையான செய்தியை வெளியிட வேண்டும்: யாழ் முஸ்லிம்கள்

வலம்புரி பத்திரிகையின் செய்தியை அடிப்படையாக வைத்து உண்மைக்கான வடக்கு மக்கள் என்கின்ற அடையாளத்துடன் இப்பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து அவர்களுடைய கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் மக்களுக்கும், ஊடகங்களுக்கும் முன்வைப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் எங்களது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் அமைதியான முறையில் தெரிவிக்கின்றோம்.

எங்களுடைய வெளியேற்றம் ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதில் எங்களிடம் மாற்று கருத்து கிடையாது. அதன் அடிப்படையில்தான் நாம் எமது மீள்குடியேற்ற செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்திருக்கின்றோம்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களின் நிலைப்படும் இதுவே. இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களின் பெயரால் பொய் உறைக்கப்பட்டுள்ளது.

இது மிகமிக நயவஞ்சகத்தோடும் சதி நோக்கோடும் எம்மீது நிகழ்த்தப்பட்ட அநீதமாகும். ஒவ்வொரு தமிழ் பேசும் மகனும் அல்லது உண்மையை விரும்புகின்ற எவரும் மன வேதனை அடைவர்.

அதற்கு எதிராக குரலெழுப்புவர். இன்று நாமும் அதனையே செய்கின்றோம்.

எமது அடிப்படையான கோரிக்கைகளாக கீழ்வருவனவற்றை முன்வைக்கின்றோம்.

1. ஓர் இனத்தின் மீது அல்லது ஒரு சமூகத்தின் மீது அதன் அடிப்படைகளை தகர்க்கும் வகையில் கருத்து சொல்வது ஊடக பயங்கரவாதம்.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இணைய ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் தங்களது நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

2. வடக்கு மாகாணசபை உறுப்பினர கௌரவ அ. அஸ்மின் அவர்கள் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதோடு சட்ட நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.


3. இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் என்று தடைசெய்யப்பட்டிருக்கின்ற கொடும்பாவி எரிப்பு நிகழ்வுக்கும் யாழ் முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இங்கு வலியுறுத்துகின்றோம். என்று பேரணியில் கலந்து கொண்டு கருத்துக் கூறினார்கள்.

இப் பேரணியில் கலந்து கொண்டிருந்த வடக்குமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் வலம்புரிக்கு எதிரான இப் பேரணி தொடர்பாக கருத்து வெளியிடுகையில் மக்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றேன்.

அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. அர்களுடைய கோரிக்கைகளுக்கு அமைய வலம்புரிக்கு எதிரான எனது நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் எதிர்ப்பு பேரணியில் ஏராளமான முஸ்லிம் சகோதரர்களும், தமிழ் சகோதரர்களும் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்