ஊறணிப் பகுதி மக்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் :மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபாலசிங்கம்

ஊறணிப் பகுதியில் 500 மீற்றர் பிரதேசம் மீனவ மக்களின் வாழ்வாதார நன்மை கருதி விடுவிக்கப்பட்டதான செய்தி ,
வேண்டும் என்றே அப் பகுதி மக்களை ஏமாற்றும் செயல் ஆகவே கருதப்படவேண்டியுள்ளது . என வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

ஊறணிப் பகுதியில் 500 மீற்றர் பிரதேசம் சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவுள்ளதாக அறிந்து அப் பகுதி மீனவ மக்கள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த மக்களின் வாழ்வாதார நன்மை கருதியே ஊறணியில் 500 மீற்றர் கடற்கரை விடுவிக்கப்பட்டதான செய்தி வெளியிடப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்டதனை அடுத்து ஊறணி மக்களுடன் நானும் சென்று பார்வையிட்டேன்

அங்கே மக்களின் வாழ்வாதார நன்மைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. மாறாக வேண்டும் என்றே அப் பகுதி மக்களை ஏமாற்றும் செயல்வடிவமாகவே சுதந்திர தின செயல்பாட்டைக் கருதப்படவேண்டியுள்ளது . 500 மீற்றர் நீளத்தின் வெறும்கடல் விடுவிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் எவ்வாறு தொழில் செய்ய முடியும் என்று சற்றேனும் சிந்தனையற்ற செயல் என்றே கருதப்படவேண்டியுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து பலாலிக்குச் செல்வதற்காக படையினர் அமைத்த வீதியினை மட்டும் விடுவித்தால் மீனவர்கள் எங்கு படகினை நிறுத்துவது எங்கு வாடி அமைத்து இயந்திரங்கள் வலைகளைப் பாதுகாப்பது. எந்த நிலத்தில் வலைகளை உளர வைப்பது இதற்கான தொழிலாளர் எங்கு தங்குவது. எவற்றையுமே கருத்தில் கொள்ளாது விடுவிக்கப்பட்ட இப் பிரதேசத்தினால் ஒரு மீனவக் குடும்பம்கூட நன்மையடைய முடியுமா? என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது.

இப் பகுதி மீனவர்கள் 27 வருடம் பட்ட வேதனைக்கு பரிகாரம் வழங்குவதாக இருந்தால் காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியின் வடக்குப் பகுதியினை முழுமையாக விடுவிக்க வேண்டும் . அவ்வாறு விடுவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக அங்கே 217 குடும்பங்கள் மீள் குடியேறுவதோடு அவர்களின் வாழ்வாதார உபகரணங்களாக படகுகள் வலைகளைக் கொண்டுவந்து அப் பகுதி கடலில் தொழில். புரிவர் . அவ்வாறு தொழில் புரியும் மீனவனுக்கு அருகில் உள்ள அவனது குடும்பம் உணவு முதல் தொழில் உதவிகள்வரை ஒத்தாசை புரிவர் அதுவே உண்மையான வாழ்வாதாரமாக கருதப்படும்.

இதற்கு மாறாக நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாக படம் காட்டப்பட்ட பிரதேசத்தின் ஊடாக எந்தவிதமான நன்மையும் கிடையாது. இப் பகுதியை விட்டாலும் ஒன்றுதான் அதனை விடாது படையினரே வைத்திருப்பதும் ஒன்றுதான். எமது கடல் பிரதேசம் விடுவிப்பதாக ஆசை காட்டி இராணுவத்தினர் எம்மை ஏமாற்றி விட்டனர். என்றே இப்பகுதி மக்கள் நம்புகின்றனர் என்றார்.

யாழருவி செய்தியாளார் பகலவன்