எதிர்க்கட்சியாக கூட்டமைப்பிற்கு பதில் மகிந்த அணியினரை அங்கீகரிக்க முடியாது!

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மகிந்த ராஜபக்‌ச அணியினரை அங்கீகரிப்பதற்கான மனுவை பாராளுமன்ற சபாநாயகர் நிராகரித்துள்ளார்

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன.

இருப்பினும் இலங்கையில் ஆளும் சுதந்திர கட்சியில் மைத்திரியின் தலைமையை, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் விசுவாசிகள் சிலர் ஏற்காமல் எதிர்ப்பு அணியாக செயல்பட்டமையைத் தொடர்ந்து,

மகிந்த தலைமையில் இலங்கை மக்கள் கட்சி எனும் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களுடன் சம்பந்தனின் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக உள்ளது.

இதற்குப் பதிலாக 70 உறுப்பினர்களைக் கொண்ட தங்களது கட்சியை பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்க கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் மகிந்த அணியினர் மனு ஒன்றை அளித்தனர்.

ஆனால், பாராளுமன்ற தேர்தலில் மகிந்த அணியினர் மைத்திரியின் இலங்கை சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக உள்ள நிலையில் அவரது கட்சி சார்பில் வெற்றிபெற்ற ராஜபக்‌சே அணியினரை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி கோரிக்கை மனுவை இன்று (10) சபாநாயகர் நிராகரித்துள்ளார்.