ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி! தடுத்த காவலரின் மண்டை உடைந்தது!!

பெரம்பலூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரைப் பிடிக்க முயன்ற காவலரின் மண்டை உடைந்த நிலையில் பொதுமக்கள் திருடனை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஐடிபிஐ வங்கி கிளையின் ஏடிஎம் இயந்திரத்தை அதிகாலை சுமார் 4.15 மணிக்கு உடைத்து கொள்ளை அடிக்க திருடன் ஒருவர் முயன்றுள்ளான்.

அப்போது அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டி இதனை அவதானித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஊர்க்காவல் படை வீரர் கண்ணன் என்பவர் விரைந்து வந்து, கொள்ளையை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது திருடன் கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள் கொள்ளையனை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த ஊர்க்காவல் படை வீரர் மற்றும் கொள்ளையனுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவன் நாமக்கல் மாவட்டம் இடையப்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் என்பதும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டியாக சூப்பர் வைசராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகிறது.