ஐ.பி.எல் கிரிக்கட் சூதாட்டம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்

ஐ.பி.எல் கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12-வது ஐ.பி.எல். கிரிக்கட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஒப்’ சுற்றுக்குள் நுழையும்.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது.

பொலிஸாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூர் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நகர குற்றப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் குற்றப்பிரிவு பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 4.20 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.