ஓயாது ஒலிக்கும் மரண ஓலங்கள்…!

துள்ளிக்குதித்து வரும் கடல் அலையையும், கரையோடு மோதும் போது எழும் ஓசையையும் ரசித்து வந்த நமக்கு, கடல் அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி..

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்திரா தீவின் வடமேற்குக் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தூரத்தில் ஆழ்கடலில் 9.6 புள்ளிகள் ரிக்டர் அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சுனாமியின் கோரத் தாண்டவம் அரங்கேறியது.

உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் 30,196 மக்களை காவு கொண்டது.

நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையால் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகள் உட்பட 14 நாடுகளை சேர்ந்த 230, 000 பேர் மாண்டுபோயினர் என்பது துன்பியலே…

பிலோப்போனேசியப் போர் வரலாறு

கி.மு. 426 இல் கிரேக்க வரலாற்று ஆசிரியர் தியுசிடைட்ஸ் சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை  “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

அவர்தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும்.

பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட ஆழிப்பேரலை ஏற்படுகிறது.

கடலில் நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

கி.பி.365 இல் அலெக்சாந்திரியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுக்குப் பின் ரோமன் வரலாற்று ஆசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் என்பவர் சுனாமி என்பது கடலில் நிலநடுக்கத்தில் தொடங்கி கடல்நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து இராட்சத அலை என்றவாறு தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்று கோடிட்டுக் கூறியிருந்தார்..

அதாவது நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல்பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்திலுள்ளவை அதிர்ந்து சேதமாகிறது.

கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பேரலைகளை உருவாக்குகின்றது.

மலையில் நிலநடுக்கம் வந்தால் எரிமலையாக உருவெடுக்கிறது. பல இலட்ச ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது.

அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கேற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின.

இந்தத் தட்டுக்களின் மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத் தட்டுக்கள்தான். இதைத்தான் “டெக்டானிக் பிளேட்டுகள்” என்று புவியியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி கி.மு. 365 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி கிழக்கு மத்திய தரைக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தோன்றி, எகிப்தில் அலெக்சாந்திரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன் முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் தோன்றிய சுனாமிப் பேரழிவை போர்த்துக்கல், ஸ்பெயின், மொரோக்கோ ஆகிய நாடுகள் சந்தித்தன என்று கூறப்படுகிறது…

சுனாமி என்றால்..

‘சுனாமி’ என்ற ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு “துறைமுக அலை’ எனப் பொருள். “ஆழிப் பேரலை’ எனவும் அழைக்கப்படுகிறது.

கொத்து கொத்தாய் இடம்பெற்ற உயிரிழப்புக்கள்

உயிர்களை பலிக்கொடுத்த மக்கள் உள்ளங்களில் ரணமாக இருக்கும் காயம் இன்னும் ஆறாமல் அப்படியேத்தான் இருக்கிறது.

அதற்கான மருந்து காலத்திடம் தான் உள்ளது. காலம் கடந்து போக… போக… இந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

அன்று கேட்ட மரண ஓலங்கள் காலங்களைக் கடந்த பின்னரும் ஓயாது ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது..

இவ்வாண்டும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் சுனாமி அலைகள் ஏற்பட்டு பெரிதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் ஓயாது ஒலிக்கிறது மரண ஓலங்கள்.

www.yaalaruvi.com