கட்டிப்பிடி வைத்தியம் வேண்டாம்: வசைபாடிய பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல்!

மோடியை கடுமையாக விமர்சித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்துள்ளார். அதற்கு பாஜக பெண் எம்.பி பாதல், “கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது இடமில்லை என கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று (20) நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதன்பின்னர் தனது உரையை முடித்துக் கொண்டு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற அவர் மோடியை கட்டிப்பிடித்தார்.

மோடியும் சிரித்துக்கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பாஜக பெண் எம்.பி பாதல், “முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என தெரிவித்தார்.

(முன்னாபாய் என்ற இந்தி படத்தில் அனைவரையும் கட்டிப்பிடித்து அமைதிப்படுத்துவது போல காட்சிகள் இருக்கும். தமிழில் இது வசூல்ராஜா என்ற பெயரில் வெளியானது)

ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்க போகலாம் என மற்றொரு பாஜக பெண் எம்.பி கிரண் கெர் தெரிவித்தார்.

“ராகுல் வயதளவில் வளர்ந்து விட்டாலும் அவர் குழந்தை போல நடந்து கொள்கிறார்” என ராகுலின் கட்டிப்பிடித்தல் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கூறியுள்ளார்.