கணவனுடன் சேர்த்து வைத்தது ஒரு குற்றமா?: வளைத்து வளைத்து தாக்கப்பட்ட இளைஞன்

கணவனுடன் சேர்த்து வைத்த ஆத்திரத்தால் அண்ணி உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே பெரிய சேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்த முத்து என்பவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் மணி. இளைய மகன் செல்வகுமார் (வயது 25). இவர் விசைத்தறி தொழிலாளியாக இருந்தார்.

இவரது மனைவி பெயர் லீலாவதி (22). சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான். செல்வகுமாரின் அண்ணன் மணிக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் கோபம் கோண்டு லட்சுமி திடீரென மாயமாகி விட்டார்.

இந்த நிலையில் தனது அண்ணி சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருப்பதை செல்வகுமார் அறிந்து கொண்ட நிலையில் எப்படியாவது தனது அண்ணியை அண்ணனிடம் சேர்த்து வைக்க வேண்டும் என செல்வகுமார் எண்ணி சங்ககிரிக்கு சென்றார்.

அங்கு தனது அண்ணியை பார்த்து பேசி வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு கொளுந்தன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் லட்சுமி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது செல்வகுமார் அந்த வழியாக வந்தார். அவரை பார்த்ததும் லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

‘‘எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்று தானே சென்றேன். நான் இருந்த இடத்துக்கு வந்து வலுக்கட்டாயமாக ஏன் இங்கு அழைத்து வந்தாய்?’’ என்று லட்சுமி கேட்டு தகராறில் ஈடுபட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதனையடுத்து அருகில் கிடந்த கட்டையை எடுத்த லட்சுமி செல்வகுமாரை சரமாரியாக தாக்கினார். அப்போது லட்சுமியின் உறவினர்கள் 6 பேர் அங்கு வந்தனர். 2 இளம்பெண்கள், 2 வயதான பெண்கள், 2 ஆண்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கொண்டு செல்வகுமாரை சுற்றி வளைத்து அடித்தனர்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் செல்வகுமார் நிலை குலைந்து மயங்கி விழுந்தமையைத் தொடர்ந்து அயலவர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே செல்வகுமார் இறந்து விட்டதாக கூறினர்.

செல்வகுமாரை 8 பேர் சேர்ந்து தாக்கியபோது அந்த வழியாக வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

செல்வகுமாரை தாக்கி அவர் மயங்கி விழும் வரை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சியை வைத்து லட்சுமி உட்பட 4 பேரை அடையாளம் கண்டுபிடித்து விசாரணை பொலிசார் நடத்தி வருகிறார்கள்.