கருணா போட்ட கணக்கு; மகிந்தவிடம் சரணடைந்தார் வியாழேந்திரன்…. அடுத்தது யார்..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்துள்ளதோடு, அமைச்சுப் பொறுப்பையும் பெற்றுக்கொண்டார்.

தென்னிலங்கை அரசியலில் நாளுக்கு நாள் வியப்பூட்டும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் முடிவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

அத்தோடு பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயல் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அத்துடன் இந்த விடயம் சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தது.

அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பிரதமாராக நியமித்துள்ளார் என தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர், அலரி மாளிகையினை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆனால் எது எவ்வாறு இருப்பினும் மகிந்த – மைத்திரி தரப்பினர் தனது அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கியதேசியக் கட்சி கடும் பிரயத்தனம் செய்கிறது.

இதனைத் தொடர்ந்து கட்சி தாவல்கள் அதிகமாக இக் காலப்பகுதியில் இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த வாரம் முழுவதும், கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல கோடி ரூபாய்களையும், அமைச்சு பதவிகளையும் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு தனது ஆதரவைக் கொடுத்துள்ளார்.

அத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மகிந்தவின் சகா கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தனது டுவிட்டர் பதிவிலும் கூறியிருந்தார்.

“நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அவர் சொன்னது போல கூட்டமைப்பில் இருந்து இன்றைய தினம் வியாழேந்திரன் வெளியேறி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருணாவின் ட்விட்டர் பதிவைப் போல் மேலும் இருவர் வெளியேறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் எது எப்படியோ பேரம் பேசும் நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதால் பல திருப்பங்கள் கொழும்பு அரசியலில் அரங்கேறலாம் என பல விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த அரசியல் குழப்பங்களால் தமிழ் மக்களிடையே மீண்டும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது என்பது உண்மை.