கல் தடக்கி கால் விரல் காயத்திற்கு நாய்க்கடி ஊசி போட்ட அரச மருத்துவர்!!

கல் தடக்கி கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுக்க சென்ற சிறுவனுக்கு நாய்கடி ஊசி போட்ட மருத்துவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் நரேஷ் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுவன் விளையாடும் போது கல் தட்டி கால் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக 11 ஆம் திகதி காலை நரேஷ் தனது சகோதரருடன் ராயப்பேட்டை அரசுமருத்துமனைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர் காலில் உள்ள காயத்தை பார்த்துவிட்டு நாய் கடிக்கு போடும் ஊசியை எழுதி கொடுத்துள்ளார்.

நரேஷுக்கு 2 ஊசிகள் போடப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல். தொடர்ந்து 14 ஆம் திகதியிலிருந்து இருந்து மீண்டும் ஊசி போடவேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

அதனை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு வேறொரு மருத்துவர் இருந்துள்ளார்.

நரேஷுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சீட்டில் நாய் கடி ஊசி என்று எழுதி இருப்பதை பார்த்து அந்த மருத்துவர் அதிர்ந்து போய் கேள்வி எழுப்பிய பின்னர்தான் தனக்கு நாய் கடி ஊசி போடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அரசு மருத்துவரின் அலட்சியம் குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவர் தற்போது விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அதிகாரி உறுதி அளித்துள்ளார்.