காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? என வெளிப்படுத்தகோரியும், இலங்கை அரசுக்கு ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் கால அவகாசம் வழங்க கூடாதெனவும் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மைநிலை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி வடக்கு கிழக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை கிளிநொச்சி நகரிலுள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள் சர்வமத தலைவர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் அனைவரும் ஏ9 விதியை முடக்கி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.

பின்னர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியில் உள்ள ஐநா சபையின் பிராந்திய அலுவலகம் நோக்கி இந்த மாபெரும் மக்கள் பேரணி நகர்ந்து இறுதியில் ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த மாபெரும் மக்கள் போராட்டம் நண்பகல் 12 30 மணியளவில் நிறைவுக்கு வந்தது இந்த போராட்டத்தினால் சுமார் இரண்டரை மணி நேரம் ஏ9 பிரதான வீதியில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்