காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்.நகுலேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தாலும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களினாலும் எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதற்கான நீதியைக் கோரி எமது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வருடக் கணக்கில் வீதியிலேயே கிடந்தும் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் நீதி கோரி எதிர்வரும் 19.03.2019 அன்று எமது உறவுகளால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும்

கடையடைப்பு என்பவற்றிற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினர் உட்பட வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பினை நல்கி எமது மக்களுக்கான நீதி விடயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் இப் போராட்டத்திற்கு போராளிகள் என்ற வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினராகிய நாமும் எமது பூரண ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நல்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழருவிக்காக நடேஷன் குகதர்ஷன்