காதலிக்க மறுத்த பெண்: தீ வைத்து எரித்த இளைஞன்

சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை தீவைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் சண்முகம், கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.

ரேணுகாவின் மூத்த மகள் இந்துஜா, வேளச்சேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தநிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் கடந்த சில மாதங்களாக நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

திடீரென ஒருநாள் தனது காதலை ஆகாஷ் கூறியதை அடுத்து, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இந்துஜா.

இதையடுத்து, இந்துஜா வெளியில் செல்லும் நேரங்களில் அவரை பின் தொடர்ந்து, தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்..

இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை இந்துஜா மீது ஆகாஷ் ஊற்றியுள்ளார்.

இதையடுத்து, அவரது தாய், சகோதரி ஆகியோர் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து ஆகாஷை தடுத்துள்ளனர்.

ஆனால், ஆத்திரம் கண்ணை மறைத்த நிலையில் இருந்த ஆகாஷ், திடீரென தீவைத்துள்ளார்.

பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆகாஷ் தப்பியோடிய நிலையில், உடல் முழுவதும் தீப்பற்றிய இந்துஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த ஆதம்பாக்கம் பொலிசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயில் கருகி உயிரிழந்த இந்துஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.