காதலியின் தாயை பெரலில் அடைத்து வைத்துக் கொன்ற இளைஞன் (படங்கள்)

திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு பெரல் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது.

இந்நிலையில் இது பற்றி அப்பகுதிவாசிகள் மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பொலிசார் குறித்த பெரலை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.

பேரல் முழுவதும் கொன்கிரீட் கலவையால் மூடப்பட்டிருந்தது. பொலிஸார் கொன்கிரீட் கலவையை உடைத்து பார்த்தனர். அதில் ஒரு பெண்ணின் பிணம் காணப்பட்டது.

கால்கள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு, கைகள் மடங்கிய நிலையில் நிர்வாண நிலையில் சடலம் கிடந்துள்ளது. அதோடு சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

இதனை பார்த்த பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண் யார்? எதற்காக கொன்கிரீட் கலவைக்குள் புதைக்கப்பட்டார்? என்பது குறித்து விசாரணையினை மேற்கொண்டனர்.

அப்போது பெண்ணின் கால்களில் முறிவு ஏற்பட்டு அதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த வடு இருப்பதை பொலிஸார் கண்டனர்.

மேலும் முறிவுக்காக அந்த பெண்ணின் காலில் இரும்பு தகடு பொருத்தப்பட்டு அது 6.5 செ.மீ. நீள ஸ்குரூ மூலம் இணைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர்.

அந்த ஸ்குரூ வித்தியாசமாக இருந்ததால், அந்த ஸ்குரூவை எந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்தது என்பதை விசாரித்தனர்.

இதில் அந்த ஸ்குரூ, பூனாவில் உள்ள மருத்துவ நிறுவனம் தயாரித்தது தெரியவந்தது.

அந்த நிறுவனத்தின் ஸ்குரூ, திருவனந்தபுரம் அருகில் உள்ள சில எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்ததை பொலிசார் அறிந்தனர்.

இதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு விசாரணையினை தொடர்ந்து பொலிசார் நடத்தினர்.

இதில் 6 பெண்களுக்கு இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் 5 பெண்கள் அதே வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதும் ஒரு பெண் மட்டும் பல மாதங்களாக சிகிச்சைக்கு வரவில்லை என்ற விவரத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சிகிச்சைக்காக செல்லாத பெண் யார்? என தேடியபோது அவர் திருவனந்தபுரத்தை அடுத்த உதயன் பேரூரை சேர்ந்த தாமோதரன் என்பவரின் மனைவி சகுந்தலா என்பது தெரியவந்தது.

இவர் அப்பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சகுந்தலா காணாமல் போனபின்பும் அவரை மகள் தேடவில்லை. பொலிஸிலும் முறைப்பாடு செய்யவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார், சகுந்தலாவின் மகளை தேடிபிடித்து விசாரித்ததோடு அவருக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்தனர்.

இதன் அறிக்கை பெரலில் கண்டுபிடித்த பெண்ணுடன் பொருந்தி போனதை தொடர்ந்து பிணமாக கிடந்த பெண், சகுந்தலா தான் என்பதை உறுதி செய்துகொண்டு விசாரணையினை தொடர்ந்தனர்.

விசாரணையில் இறங்கிய போது சகுந்தலாவின் மகளுக்கு ஒரு காதலன் இருந்ததும், அவர் சகுந்தலாவின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் சகுந்தலா மகளின் காதலரின் நண்பர்களை பிடித்து இரகசியமாக விசாரித்தனர். இதில் மகளின் காதலனே சகுந்தலாவை கொலை செய்து பெரலில் புதைத்துள்ளார் என்ற மர்மம் வெளிவந்தது.

மகளுக்கும் அந்த வாலிபருக்கும் உள்ள காதலை சகுந்தலா ஏற்க மறுத்ததோடு, காதலனையும் கண்டித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் அவர் சகுந்தலாவை கொன்று பேரலில் புதைத்துள்ளார்.

பின்னர் பெரலை அருகில் உள்ள கும்பளம் ஏரியில் போட்டுள்ளார். ஆனால் பெரல் ஏரியில் இருந்து கரை ஒதுங்கி கல்லறை தோட்டம் அருகே வந்துவிட்டது.

குறித்த பெரல் மக்களின் பார்வையில் பட்டு வெளிச்சத்துக்கு வரவே இந்தக் கொலை அம்பலமாகியுள்ளது.