சபரிமலையில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கேமராமேன் மீது தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை படம் பிடித்த டி.வி. கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக ஐயப்பன்கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

இந்த நிலையில், சபரிமலைக்கு 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஒருவர் தரிசனம் செய்ய வந்துள்ளார் என வதந்தி பரவியது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குறித்த போராட்டத்தை படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மலையாள தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் விஷ்ணு என்பவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.

போராட்டம் நடைபெற்ற இடம் அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் இருந்து, போராட்டக்காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் விஷ்ணுவை நோக்கி தேங்காய், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட சில பொருட்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீசியுள்ளனர்.

எனினும், அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவாளருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு எதுவும் தற்போது வரை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சபரிமலைக்கு வந்த பெண் 52 வயதான லலிதா எனக் கூறப்படுகிறது.

ஐயப்பன் கோவிலில் தங்கள் வீட்டு குழந்தைக்கு ‘சோறுண்ணும்’ சடங்கு நடத்துவதற்காக தனது குடும்ப உறுப்பினர்களுடன் லலிதா என்ற அந்த பெண் அங்கு வந்ததாகவும், 18 படிகள் அமைந்துள்ள இடத்தின் அருகே அவர் நின்றிருந்ததாகவும் பொலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன