சரணடைந்தவர்களை சுட்டுக் கொல்லவில்லையாம்..! அப்போ என்ன தான் நடந்தது…??

இலங்கையின் இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் மீறப்பட்டமையை வெளியான புகைப்படங்கள் ஆதாரம் காட்டியிருந்தது.

இந்த நிலையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் முறைப்பாடு தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையை விசாரிக்க ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் ராணுவத் தளபதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன்மொழியத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் கடும் சண்டை நடைபெற்று வந்தது.

2009 இல் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது.

இதில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இப்போரின் இறுதி நாட்களில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைக்குழுக்கள் குற்றம்சாட்டின.

இந்த உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட விவகாரத்தில் இலங்கை அரசின் தொடர்பு குறித்து ஐநா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானங்கள் 2012லிருந்து தொடர்ந்து கேள்விக்குட்படுத்தி வருகிறது.

இரு தரப்பிலும் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 2014ல் ஐநா தீர்மானத்தின்படி ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பது வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் தற்போது பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், போரில் பொதுமக்கள் மட்டும் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ தளபதி மஹேஷ் செனநாயகா இலங்கை தெற்கு நகரமான வெலிகமாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:

எந்த விசாரணையையும் சந்திப்பதில் எங்களுக்கு பயம் இல்லை. ஏனெனில் நாங்கள் எந்தவிதமான குற்றத்திலும் ஈடுபடவில்லை. எந்தப் போரிலும் பொதுமக்கள் உயிரிழப்பு என்பது இருக்கத்தான் செய்யும்.

இது கடினமான உண்மைதான். அப்படியில்லாமல் எந்த போரிலும் ஈடுபட முடியாது. அதற்காக போரின் போது நாங்கள் செய்ததை நியாயப்படுத்தவதில்லை.

நடந்தவற்றை துருவித் துருவி தோண்ட வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள நல்ல விஷயங்களைப் பாருங்கள்.

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை எந்தவிதமான சர்வதேச விசாரணையும் தேவையில்லை; எங்கள் நீதித்துறையே அதை செய்யும்.

தமிழ் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் சர்வதேச (வாட்ச்டாக்) கண்காணிப்பக அமைப்புகள் மருத்துவமனைகளின்மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும்,

போரின்போது மனிதாபிமான பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி மறுத்ததாகவும் குற்றம்சாட்டுகின்றன.

அதுமட்டுமின்றி சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றதாகவும் குற்றம்சாட்டுகின்றன. இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்.

போரில் 26 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 37 ஆயிரம்பேர் படுகாயமடைந்தனர் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

எனினும் ராணுவத் தாக்குதலினால் புலிகள் மிகப்பெரிய அளவில் கொல்லப்பட்டனர். முழு கொரில்லா தலைமையும் அழிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 2015 ஆம் ஆண்டு இறுதி தீர்மானத்தின்படி இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

ஆனால் இன்னும் சில பணிகள் மீதியுள்ளதாகவும் தீர்மானத்திற்கு இணைந்து ஒத்துழைப்பு நல்குவதற்கு இன்னும் சிலகாலம் தேவைப்படுவதாகவும் ராணுவத்தின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மகிந்தா ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்போதே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை ராணுவத்தை போர் விதிமுறைகளை மீறுவதற்கு தூண்டியதாக குற்றச்சாட்டு வைத்தது.

இந்நிலையில் இலங்கையை விசாரிப்பதற்கான புதிய தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபை இந்த வாரம் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை போர் முடிவுக்கு வந்த பின்பு வாழ்வாதாரம் இன்றி எத்தனையோ மக்கள் இன்று வரை துன்பத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர்.

அத்தோடு காணாமல் போன உறவுகளின் நிலை கண்டுகொள்வார் யாருமில்லை என்ற நிலை உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புடனேயே நாட்களை நகர்த்துகிறார்கள். அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

-கணேசலிங்கம் நடராஜன்-