சிவ அவதாரத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்!!

முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘சிவ அவதார’ புகைப்படங்கள் வெளியாகி பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை, இந்து மதக் கடவுளாக (சிவன் போல) சித்தரித்து புகைப்படம் வெளியிட்டது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட பிரதான எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் ரமேஷ் லால், ஆளும் முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் இம்ரான் கானின் புகைப்படத்தில் அவரை இந்துக் கடவுள் சிவனாக சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான அறிக்கையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தலால் சௌத்ரி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஜ் சாதிக் உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக ரமேஷ் லால் தெரிவித்தார்.

இதேவேளை முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோன்று இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரமேஷ் லால் கோரிக்கை விடுத்தார்.