சென்னை குறித்து தோனி அதிருப்தி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தின் நிலைமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்றுமுன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றது.

109 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.2 ஆவது ஓவரில் வெற்றியை அடைந்தது.

இந்த வெற்றியின் பின்னர் தோனி, சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

மீண்டும் பெங்களூருவுடனான முதல் போட்டி போலவே இதுவும் அமைந்து விட்டது. ஆடுகளம் குறித்து புகார் கூறிக்கொண்டே வெற்றியும் பெற்று விடுகிறோம். இது போன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் இங்கு மிகவும் குறைந்த ஓட்டங்களே எடுக்க முடிகிறது.

எங்களது துடுப்பாட்ட வீரர்களும் இந்த ஆடுகளத்தில் ஓட்டங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது.

எனினும் சேப்பாக்கம் மைதானத்தில் நான் நீண்ட காலம் விளையாடி வருகிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் உட்பட மறக்க முடியாத நினைவுகள் எனக்கு இந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகம் உண்டு. ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்சை கொண்டாடுகிறார்கள்.

இந்த அணி உதயமானதில் இருந்து நானும் அதில் அங்கம் வகிக்கிறேன். எனக்கும், சென்னை ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு சிறப்பு வாய்ந்தது. அவர்கள் உண்மையிலேயே என்னை உள்ளூர் வீரராக ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.