டிக் டாக்கினால் ஏற்பட்ட விபரீதம்! உயிர்விட்ட பெண் – ஆதரவற்று தவிக்கும் குழந்தைகள்

கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த தங்கமணியின் மகள் அனிதாவுக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக் டாக் செயலி வந்தது.

தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக் டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.

அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் தெரிவித்தனர். அவரும் மனைவியை கையடக்க தொலைபேசியில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை கையடக்க தொலைபேசியில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக் டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.

வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குன்னம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.