தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்ற சுவீடன் வீராங்கனை!!

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு விளையாட்டில் முதல் தங்கப்பதக்கத்தை சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா பெற்றுள்ளார்.

23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில், முதல் தங்கப்பதக்கத்தை சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா தட்டிச்சென்றார்.

பெண்களுக்கான ‘ஸ்கியத்லான்’ என்ற ஒரு வகை பனிச்சறுக்கு பந்தயம் நேற்று நடந்தது.

இதில் சார்லோட் கல்லா 15 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 40 நிமிடம் 44.9 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

30 வயதான சார்லோட், ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரை விட 7.8 வினாடி பின்தங்கிய நடப்பு சாம்பியன் மரிட் ஜோர்ஜென் (நார்வே) வெள்ளிப்பதக்கமும், கிறிஸ்டா பர்மாகோவ்ஸ்கி (பின்லாந்து) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.