தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட பிரியங்கா பெர்னாண்டோ!

இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு பிரித்தானியா Westminster நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நேற்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகிப் போனது பிரியங்கா பெர்னாண்டோவின் கதை.

கடந்த 04.02.2018 அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக லண்டனில் நடந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ் சமூகம் திரண்டிருந்தது.

லண்டன் ஸ்ரீலங்கா உயர்தானிகரத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமை புரித்திருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கழுத்தை அறுப்பேன் என்று அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

லண்டன் பாதுக்காப்பு அதிகாரிகள் முன்னிலையிலே அவர் இவர் விடுத்த அச்சுறுத்தலின் சாட்சிக்கான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சிங்கள அரசாங்கத்தின் நற்பெயருக்காக உடனடியாக ஸ்ரீலங்கா உயர்தானிகரத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமை புரியும் பிரியங்க பெர்னான்டோ பதவி விலக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

பின் 24 மணித்தியாலங்களுக்குள் அவருக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதியினால் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்களினால் லண்டனில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவர் காட்டிய சைகை ஒன்றினால் பெரும் பரபரப்பும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் ஆர்ப்பரித்திருந்தன.

இராணுவ சீருடை அணிந்து கழுத்தில் கத்தியை வைத்து, தமிழ் மக்களின் கழுத்தை வெட்டுவிடுவேன் என்பதனை போன்ற சமிக்ஞை காட்டியமை துவேசத்தை காட்டுவதாகவும், தமிழ் மக்களுக்கான அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தி இருந்தது.

இந்த நிலையிலேயே அவருக்கு பிரித்தானியா Westminster நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஆணையர் நீதிமன்றத்திற்கு முன்பாக வரவழைக்கப்படுவார் என அந்த பிடியாணை உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல்கள் ஏதும் தெரியாது என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளதாவது;

“பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடைமுறைகளுக்கு அமைய, முறைப்படி எமக்கு அறிவிக்க வேண்டும்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

எமக்கு அதிகாரபூர்வ அறிவித்தல் அளிக்கப்பட்டால், சட்டப்படி நாங்கள் செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை அறுப்பேன் என சமிஞ்சை காட்டியமைக்கான ஆதாரங்கள் தமிழ் மக்கள் மீதுள்ள வெறுப்புணர்வை வெளிக்காட்டியுள்ளது.

ஆனால் எது எவ்வாறிருப்பினும் கழுத்தை அறுப்பேன் என்ற சமிஞ்சை மூலம் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுள்ளார் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ.

-அலவன்-