தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை!

தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த நேரத்தில் இம் முறையும் தப்பித்துக் கொள்ளவே முயற்சிகளைச் செயற்துகொண்டிருப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென சர்வதேச விசாரணையொன்றை தமிழர்கள் கோரி வருகின்றோம்.

ஆனால் அந்த நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருகின்ற நிலையையே காணக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக கடந்த ஜெனிவா அமர்வுகளில் கூட கால அவகாசம் வழங்கப்பட்டு எதனையும் அவர்கள் எதனையும் செய்யவில்லை. வெறுமனே காணமற்போனோர் அலலுவலகமொன்றை மட்டும் திறந்து வைத்து சகலரையும் ஏமாற்றியிருக்கின்றனர்.

ஆகவே இலங்கை அரசியன் ஏமாற்று வேலைகளையும் அரசின் திட்டங்களையும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் தமிழர்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

ஆகவே இலங்கை அரசின் ஏமாற்றுச் செயற்பாடுகளையும் உணர்ந்து கொண்டு இனியும் அரசைத் தப்ப வைக்காமல் காத்திரமான நடவடிக்கைகளை ஐ.நா சபை எடுக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.

மேலும் ஐ.நா சபைக் கூட்டத் தொடர் ஆமர்பமாகியிருக்கின்ற இந்தநேரத்தில் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

நீதியைக் கோருகின்ற தமிழ்த் தரப்புக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதும் மிக மிக அவசியமானது. அந்தச் செயற்பாடுகளை தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்றவர்கள் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையையே அரசாங்கம் தொடர்ந்தும் செய்து வருகின்றது.

அதற்கமைய இம்முறையும் அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆகவே அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்