திருடனைப் பிடிக்க பட்டாசு கொளுத்திய பொலிசார்!-

திருட்டுத் தனமாக தேங்காய் பறித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து தோட்டத உரிமையாளர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மினுவன்கெவ, கெட்டபலுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் பறித்த தேங்காய்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

நேற்று மாலை தனது தோட்டத்தை கண்காணிக்க சென்ற அதன் உரிமையாளர் தென்னை மரத்தில் இருந்த திருடனைப் பார்த்துள்ளார்.

அதன் பின்னர் சத்தமிட்டு பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து திருடனை தப்பிச் செல்ல விடாமல் சுற்றிவளைத்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் திருடனை மரத்தில் இருந்து கீழே இறக்குமாறு கூறியும், திருடன் கீழே இறங்கவில்லை.

மூன்று மணித்தியாலங்களாக இந்த போராட்டம் நீடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருடனை பயமுறுத்துவதற்காக வான வேடிக்கை பட்டாசை பொலிசார் செலுத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கீழே இறங்கிய திருடனை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.