தோட்டத்தைப் பராமரிக்கும் ரோபோ!!

சிறிய தோட்டத்தை நடவு முதல், அறுவடை வரை பராமரிக்க, ஒரு ரோபோ வந்திருக்கிறது.

‘கார்டன் ஸ்பேஸ்’ என்ற பெயர் உள்ள இந்த ரோபோவை, உரிமையாளர் தனது மொபைல் மூலம் கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு மொபைல் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டதும், அதன் மூலம் உரிமையாளருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது கார்டன் ஸ்பேஸ் ரோபோ.

அந்த செயலியில் என்ன செடிகளை நடப்போகிறார் என்பதை உரிமையாளர் பதிவு செய்ததும், அதை எங்கே, எப்படி நட வேண்டும் என ரோபோ வழி சொல்கிறது.

சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் இந்த ரோபோவுடன் ஒரு நீர் குழாயை இணைத்துவிட்டால் தோட்டத்தை வலம் வந்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறது.

செடியில் விளைச்சலை எப்போது அறுவடை செய்யலாம் என்பதையும் உரிமையாளருக்கு நினைவூட்டும் இந்த ரோபோவில், 360 கோணத்திலும் சுழலும் வீடியோ மற்றும் புகைப்பட கமராக்கள் உள்ளன என கூறப்படுகிறது.

வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுவோரை இலக்கு வைத்து இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 100 சதுர அடி தோட்டத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் என கார்டன் ஸ்பேசை தயாரித்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.