தோட்டத்தை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம் (படங்கள்)

ஓட்டமாவடி பஸார் பள்ளி வீதியிலுள்ள மு.மீராமுகைதீன் என்பவரின் வீட்டின் வளவினுள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புகுந்த யானைகள் தோட்டத்தினை சேதப்படுத்தியுள்ளது.

வாகனேரி காட்டுப் பகுதியில் இருந்து காவத்தமுனை ஊடாக ஆற்றைக் கடந்து ஓட்டமாவடி பகுதிக்கு மூன்று மணியளவில் யானைகள் கூட்டமாக வந்தது.

அதில் இரண்டு யானைகள் குறித்த நபரின் வளவினுள் வந்து வாழை மரங்கள், தென்னை மரங்கள், வற்றாளைக் கொடி, பொன்னாங்கனி போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளது.

 

இதன்போது சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கும் போது யானைகள் அட்டகாசம் செய்து கொண்டு வீடு நோக்கி வருகை வந்த போது அயலவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் இரண்டு யானைகளையும் துரத்தி விட்டோம் என வீட்டின் உரிமையாளர் மு.மீராமுகைதீன் தெரிவித்தார்.

அயலவர்களின் உதவியுடன் துரத்தாவிடின் யானை பிரதேசத்திற்குள் ஊடுறுவி அனைவரினதும் வீடுகளுக்கு சென்று அட்டகாசம் புரிந்து இருக்கும்.

இப்பகுதிக்கு யானைகள் தற்போது முதல் தடவையாக வருகை தந்து விட்டதால் மீண்டும் வரும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழருவிக்காக குகதர்ஷன்