நாற்காலிக்காகத் துடிக்கிறாரா இராணுவத் தளபதி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் வெகுவாக தீவிரமடைந்துள்ளது என ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

எப்படியாவது ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமர வேண்டுமென்பதில் குறியாக உள்ளனர்.

அத்தோடு மகிந்த ராஜபக்சவும் நாற்காலிக்காக துடியாகத் துடிக்கிறார்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடகவியலாளர் முன்னிலையில் விசாரணை நடத்திய விவகாரம் கடும் முரண்பாட்டு நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதனை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் சவாலாக உள்ளது.

இன ரீதியான கலவரங்கள், மத ரீதியான கலவரங்களைத் தோற்றுவித்து ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவது நோக்கமாக உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மக்களிடையே கிலி கொள்ள வைத்துள்ளது.

ஈஸ்டர் திருநாள் சம்பவம் பெரும் சோகத்துடன் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்துக்களின் ஆலயங்கள் உடைப்பு, கிறிஸ்துவ ஆலயங்கள் உடைப்பு என்பதைத் தாண்டி தற்போது ஹம்பாந்தோட்டை, ருவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்திற்கு முன்னால் இருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மதங்களுக்கிடையேயான முறுகல் நிலையை ஏற்படுத்தும் நோக்கமாகவே இதனைப் பார்க்கப்படுகிறது.

யாரால் என்ன நோக்கத்திற்காக சிலைகள் உடைக்கப்பட்டன என்பது தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதுவொரு புறம் இருக்க இராணுவத் தளபதி ஜெனரல் மகக்ஷஸ் சேனநாயக்க தடாலடியாக கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தன்னிடம் ஒரு மூன்று மாத காலம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியுள்ளார். நாட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. தன்னிடம் நாட்டைத் தந்தால் அழகாக நாட்டை ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

இவரது கருத்தினை அரசியல் விமர்சகர்கள் பலரும் பல கோணத்தில் விசனங்களை முன்வைக்கிறார்கள்.

மக்களைப் பொறுத்தவரைக்கும் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன நிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் உண்மை.

யாழருவிக்காக அலவன்