நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினால் இலங்கையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் கூறிய அவர் இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதுபோன்ற அடிப்படைவாத குழுக்களின் செயலினால் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை சந்தேகத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாகவும் 500 பேர் காயமடைந்ததாகவும் அதில் தற்போது 375 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் 38 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 19 வெளிநாட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் 3 பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.