நெகிழி உருவான விதமும் நாம் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்களும்!

விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் இன்று பல்வேறு துறைகளில் மனிதன் சாதிக்கிறான். வளர்ச்சியும் கண்டுள்ளான். அத்தோடு சேர்ந்து அழிவையும் தேடிக்கொண்டு தான் உள்ளான் என்றால் மிகையல்ல.

மனித இனத்தின் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அப்படி இன்று நாம் கண்டுபிடித்திருக்கும் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று கூட்டம் போட்டுப் பேசுவதும் கொடி பிடித்து போராடுவதும் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா? என்றால் அது பெரும் கேள்விக்குறியே.

இன்று நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கமே தலைத்தோங்கியுள்ளது.

இன்று நாம் நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் செயலானது படுபாதகச் செயலாகும்.

ஏனென்றால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது அதனைக் கையில் வாங்குவதற்கும் குப்பையில் எரிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகுமாம்.

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.

“வார்க்கத் தக்க ஒரு பொருள்” என்னும் பொருள் தரும் “பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.

நெகிழி முதன் முதலில் 1862 இல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதற்கு அவர் “பார்க்ஸ்டைன்” என்ற பெயரிட்டார். முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள் கொண்டு “செராடின்” என்ற நெகிழியும், சில வண்டு, பூச்சிகளில் இருந்து “ஷெல்லாக்” வார்னிஷும் செய்யப்பட்டன.

பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 இல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார்.

பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது.

1907இல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார்.

முதல் உலகப் போரில், ‘டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்’வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.

1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன்,

இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெகிழியின் தீமைகள்:

மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. மேலும் பயிர்வளர்ச்சியையும் பாதிக்கிறது.

நாம் நெகிழியைப் பயன்படுத்தி விட்டு வீதியில் எறியப்படும் நெகிழிக்குப்பைகள் பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில் கலக்கிறது.

ஆறுகள் அதைக்கொண்டு வந்து கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப்பைகளை உட்கொண்டு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தற்போது இமாலாய வளர்ச்சியைப் பிடித்துள்ளது. மறுசுழற்சி செய்தால் மட்டுமே இவ்வுலகை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலும் என்பது திண்ணம்.

-அற்புதராஜா கோணேஸ்வரன்-