பட்டப்பகலில் கூரையில் துளைபோட்டு நகைக்கடையில் கொள்ளை!!

நகைக்கடையின் மாடியில் உள்ள கடை வழியாக துளைபோட்டு பட்டப்பகலில் கொள்ளையர்கள், 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் தங்கம், வெள்ளி – பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

முகேஷ்குமார் (வயது 37) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

தினமும் காலை 9 மணிக்கு கடையினைத் திறந்து பின் நண்பகல் ஒரு மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு கடை திறக்கப்படுவது வழக்கம்.

நேற்று மதியம் 1 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர். மாலை 4 மணிக்கு மீண்டும் கடையை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது கடையில் கண்ணாடி அலமாரியில் வைத்து இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது.

இதேவேளை நகைக்கடையின் மாடியிலுள்ள கடையில் இருந்து ஒருநபர் உள்ளே புகுந்து வரும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த துளையின் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.