பட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்!

பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு குழந்தையை மீட்டுள்ளனர்.

சேலம் அரிசிபாளையம், முள்ளாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, என்பவர் மெக்கானிக்காக செயற்பட்டு வருகின்றது. இவரது மனைவி நித்தியாவுக்கு ஐந்து வயதில் பரணிதரன், மூன்று வயதில் யோகேஸ்வரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

சம்பவ தினம் முற்பகல் 11.30 மணியளவில் யோகேஸ்வரன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முகத்தை மறைத்தபடி வந்த இரு பெண்கள் திடீரென யோகேஸ்வரனை தூக்கிக் கொண்டு கடத்திச் சென்றனர்.

இதை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் சத்தம் போட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து குழந்தையை பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து அப் பகுதியில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்தபோதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தராமையினால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே குழந்தை கடத்தப்பட்டமை தொடர்பாக சேலம், மாநகர பொலிஸ் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டமையையடுத்து, சோதனை நடவடிக்கையிலிருந்த பொலிஸார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந் நிலையில் குழந்தையை விரைவில் மீட்க்க இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. குழந்தை கடத்தப்பட்ட பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி.கமராக் காட்சிளை ஆய்வு செய்த பொலிஸார், குழந்தையை கடத்திச் சென்ற இரு பெண்களை வலைவீசி தேடினர்.

இதையடுத்து தங்களை பொலிஸார் தீவிரமாக தேடுவதையறிந்த இரு பெண்களும், சூறமங்களம் அருகே சேலத்தாம்பட்டி வீதியோரத்தில் குழந்தையை இறக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்களையும் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.