பயணிகளிடம் பணம் பறித்த இருவரைப் புரட்டியெடுத்த பொதுமக்கள்!

பயணிகளிடம் பணத்தை திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் நாகர்கோவிலில் இடம்பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் இரண்டு நபர்கள் பணம் திருடியதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் குடிபோதையில் இருந்த அந்த இரண்டு நபர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் தப்பித்துவிடாதபடி பேருந்து நிலையத்தில் மடக்கிப் பிடித்து வைத்துள்ளனர்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒருவர் குறித்த இருவருக்கும் சாதகமாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் போதை ஆசாமிகளுள் ஒருவர், தனக்கு சாதகமாக பேசிய நபரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இப்படியாக ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் மூர்க்கத்துடன் தாக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினரிடம் அந்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.