பால் வியாபாரத்தில் நட்டம்! தாயையும் மகனையும் கொலை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்

திருத்தணி அருகே தாயும், மகனும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை தொடர்பில் பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி, அரக்கோணம் சாலையில் உள்ள பெருமாள் தாங்கல் புதூர் கிராமத்தில் வசித்து வந்த வீரலட்சுமியும், அவரின் மகன் போத்திராஜும் கடந்த 9ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.

நெடுஞ்சாலையோரம் வீடு அமைந்திருப்பதால், ஏதேனும் கொள்ளை கும்பல் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய பொலிஸார், வீரலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசனிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர்.

ஒருகட்டத்தில் வெங்கடேசன் உண்மையை ஒப்புக் கொண்டதாக‌ கூறிய பொலிஸார், அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக தெரிவித்தனர்.

வீரலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த வெங்கடேசன் பால் வியாபாரம் செய்துவந்தார். வியாபாரம் நலிவடைந்ததால், நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக பணம் திரட்டும் முயற்சியில் இறங்கிய அவருக்கு ஏமாற்றங்களே மிஞ்சின.

செய்வதறியாமல் திகைத்த அவர் ஒருகட்டத்தில் கொள்ளையடித்தாவது பணம் சம்பாதித்துவிட வேண்டுமென முடிவெடுத்துள்ளார். முதல் திருட்டை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்தது, அருகில் இருந்த வீரலட்சுமியின் வீடு அமைந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணியளவில் வீரலட்சுமி வீட்டின் பின்புறம் ஏறி குதித்த அவர், அங்கிருந்த அறையின் விளக்கை அணைத்துவிட்டு, உள்ளே பதுங்கி இருந்துள்ளார். அப்போது வெளியே வந்த வீரலட்சுமி, வெங்கடேசனை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு கூச்சலிட்டுள்ளார்.

பதற்றமடைந்த வெங்கடேசன், தான் அடையாளம் காணப்பட்டுவிட்டதால் எப்படியும் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோம் என அஞ்சி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையால், வீரலட்சுமியின் பின் தலையில் பலமாக வெட்டி கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வீரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது 10 வயது மகன் போத்திராஜை, இஸ்திரி பெட்டி ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த வெங்கடேசன், வீட்டில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க இரண்டு கொடூர கொலைகளை செய்த வெங்கடேசன், காவல்துறையினர் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டுள்ளார்.