பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்…!!

பிரபல நடிகரும், இலக்கியவாதியுமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்.

உடல்நல குறைவால் அவர் இன்றுகாலை இன்று காலமானார். கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய இலக்கியத்திலும் , சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய கிரிஷ் கர்னாட். மகாரஷ்டிராவில் பிறந்த இவர் கொங்கனி மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்.

கன்னட நாடக இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராக விளங்கிய கிரிஷ் கர்னாட் தனது ‘மா நிஷாதா’ என்ற நாடகத்தின் மூலம் முதன்முதலாக நாடக உலகில் நுழைந்தார். தொடர்ந்து ‘துக்ளக்’, ‘ஹயவதனா’ போன்ற நாடகங்களை எழுதினார். இவரை நாடக துறையில் மிகப்பெரும் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது ’துக்ளக்’ நாடகம்தான். மிகப்பெரும் இயக்குனர்களும் கூட இந்த கதையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

தொடர்ந்து திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றிய கிரிஷ் கர்னாட் தனது மேடை நாடகங்களில் சிலவற்றை படமாக்கினார். பிறகு கன்னடத்தில் இவர் இயக்கிய ‘காடு’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ‘வம்ச விருக்‌ஷா’ திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

சினிமாவில் குணசித்திர பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் கிரிஷ் கர்னாட். ’சம்ஸ்காரா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்பட்ட 10க்கும் மேற்பட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் குணா, ஹேராம், முகமூடி, காதலன் முதலிய படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் தனது நடிப்புக்காக தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது முதலிய விருதுகளையும், இலக்கியத்தில் ஞானபீட விருது போன்ற முக்கியமான விருதுகளை வென்ற க்ரிஷ், இந்தியாவில் மிக உயர்வான விருதாக மதிக்கப்படுகிற பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

தனது 81 வது வயதில் உடல்நல குறைவால் இன்று அவர் காலமானார்.