பிரித்தானியாவை தாக்கிய எரிக் சூறாவளி! மூவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

பிரித்தானியாவில் வீசிய எரிக் சூறாவளி காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

மணித்தியாலத்திற்கு 76 மீற்றர் வேகத்தில் வீசும் இந்த சூறாவளி காரணமாக, கடல் அலைகள் மேலெழுவதோடு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

காற்றின் வேகம் தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், நேற்று கடல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடக்கு டெவோன் பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று டெவோன் பகுதியில் மணிக்கு 56 மீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக வானிலை அவதான மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று டெவோனில் நேற்று முன்தினம் மரம் முறிந்து வீழ்ந்ததில் 50 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

அத்தோடு, மேற்கு வேல்ஸில் முறிந்து கிடந்த மரத்தில் மோதிய சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காற்று மற்றும் வெள்ளம் தொடர்பான பல எச்சரிக்கைகளை நேற்று பிரித்தானிய காலநிலை அவதான மையம் வெளியிட்டிருந்தது.

குறிப்பாக வேல்ஸ், வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்து, தெற்கு மற்றும் வடக்கு ஸ்கொட்லாந்து ஆகியவற்றிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வாகன சாரதிகளை மிகவும் எச்சரிக்கையாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.