பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் ரத்து செய்யுங்கள்!!

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ‘நுண்கடனிலிருந்து மீண்டெழுவோம்’ என்ற தொனிப் பொருளில் அரசே பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடனை இரத்து செய் என கோரி பெண்கள் நேற்று வியாழக்கிழமை (14) காந்தி பூங்காவிற்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு மீண்டு வருவோம் நுண்கடனிலிலுந்து, நுண்கடனை பெண்களின் மானியமாக மாற்று, பெண்கள் கடனாக பெற்ற நுண்கடனை ரத்துசெய் போன்ற பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாலட்ட அரசாங்க அதிபர் காரியலத்திற்கு பெண்கள் குழுவினர் சென்று மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினமாகும்.

சர்வதேச மட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கப்படும் முக்கிய நாளாகவும் இது காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எமது நாட்டிலும் பெண்களுக்கு எதிராக வீட்டு வன்முறைகள் பாலியல் பலாத்காரங்கள், சமூக ரீதியான ஒடுக்கு முறைகள் பொருளாதார ரீதியான பின்னடைவுகள்,

பெண்களுக்கெதிரான மனித உரிமை மீளல்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை நாம் அறிவோம்.

எனவே, இதிலிருந்து மீளுவதற்கான விழிப்புணர்வுகளை செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.

இதன் தொடர் ‘நுண்கடன்களிலிருந்து மீண்டெழுவோம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் .

இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் எமது மாவட்டத்தில் அதிகமான பெண்கள் அதிக வட்டியுடனான நுண்கடன் திட்டங்களில் கடன்களை பெற்றுள்ளனர்.

இதனால் கடன் சுமை அதிகரித்து குடும்ப சீரழிவுகளும் பெண்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருவது தாங்கள் அறிந்ததே.

இவற்றைக் கருத்திற் கொண்டு அரசினால் நுண்கடன்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பல நன்மையான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக நாம் அறிகின்றோம்.

எனவே இத்திட்டங்களை எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நுண்கடனினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கும் இத்திட்டங்களின் மூலம் நன்மை கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த கோரிக்கைகள் அடங்கி மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் முப. உதயகுமாரிடம் கையளித்த பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

யாழருவி நிருபர் கனகராசா சரவணன்