பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட 53 ஆயிரம் பெண்கள் அவுஸ்திரேலியாவில்!

கத்னா எனப்படுகின்ற பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சடங்குக்கு உள்ளாக்கப்பட்ட 53 ஆயிரம் பெண்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வெளிநாடுகளில் பிறந்து இப்போது அவுஸ்திரேலியாவில் வாழுகின்ற பெண்கள் என கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் சுகாதார மற்றும் நலன்புரி அமைப்பு (Australian Institute of Health and Welfare) விடுத்துள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து தங்களது பிள்ளைகளை தாய்நாட்டுக்கு அழைத்துச்செல்லும் பெற்றோர்களால் இந்த சடங்கு முறையானது இன்னமும் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெண்கள் சனத்தொகையில் 0.4 வீதமான பெண்களுக்கு இந்த கத்னா முறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவர்களில் 19 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்கள் இடையிலான ஆய்வின்போது 57 வீதமானவர்களுக்கு இந்த சடங்கு முறை நிறைவேற்றப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமார் 29 நாடுகளில் இந்த கத்னா சடங்கு முறை இடம்பெற்றுவருகின்றது.

அது மாத்திரமல்லாமல் அவுஸ்திரேலியாவிலும் கடந்த காலங்களில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சடங்கு முறை கண்டுபிடிக்கப்பட்டது .

அவுஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 23 மருத்துவ நிலையங்களில் சுமார் 53 சிறுமிகளுக்கு கத்னா செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கத்னா செய்வதானது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் மீறுவோருக்கு 14 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்குவதற்கு 2000 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.