பெப்ரவரி 10: தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்டார்!

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளி பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது வயதிலேயே சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அதன்பின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தை காட்டினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தினார்.

1957 ஆம் ஆண்டு திமுக சார்பில் குளித்தலையில் போட்டியிட்டு, முதன்முறையாக தனது சட்டமன்ற வரலாற்றை தொடங்கினார்.

1967 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருணாநிதி திமுக பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார்.

அண்ணாத்துரையின் மறைவுக்கு பின்னர் 1969 ஆம் பெப்ரவரி மாதம் இதே திகதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறையும் பதவி வகித்துள்ளார்.