பெற்ற பிள்ளைகளுக்கு அரளி விதையைக் கொடுத்த தாய்! உயிர் போகும் தருவாயில் நடந்த சோகம்!

கணவர் உயிரிழந்த சோகத்தில் தன்னுடைய குழந்தைகளை விஷம் கொடுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்த அருளழகன் (32). இவருக்கு சத்யா (27) என்ற மனைவியும் காவியா (10), அக்‌ஷயா (5) என்ற 2 மகள்களும், அகிலன்(2½) என்ற மகனும் உள்ளனர்.

காவியா ராம நத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த அருளழகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சத்யா வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமையும் அதிகமாகியுள்ளது.

மிகுந்த மன வேதனையடைந்த சத்யா தான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என நினைத்து அரளி விதையை மிக்சியில் அரைத்து, பாலில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார்.

தாய் கொடுப்பது விஷம் என்று தெரியாமல் காவியா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேருக்கும் வாங்கி குடித்தனர். பின்னர் விஷம் கலந்தபாலை சத்யாவும் குடித்தார்.

சிறிது நேரத்தில் சத்யா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர்.

ஆனால் காவியா மட்டும் மயங்கி விழாமல் அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அயலவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் சத்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் காவியா உள்ளிட்ட 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அகிலன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காவியா, அக்‌ஷயா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.