பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்!!

இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்களின்படி பேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர். அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் பேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும்.

விளம்பரதாரர் சார்பில் பேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.

முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக பேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்திருந்த நிலையில், இவை பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் அமலாகும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.