பொள்ளாச்சிக் கொடுமை: பாலியல் கொடூரங்களின் உச்ச கட்டம்!-

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையும், கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வக்கிரத்துக்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்தி பலரது மனங்களை உலுக்கியுள்ளது.

குற்றவாளிகளின் வலைப் பின்னல், அரசியல் கட்சித் தொடர்புகளின் பின்னணி என்று அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் மக்களை மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

பாலியல் சீண்டல்கள், வல்லுறவு முயற்சிகள், நம்பிக்கைத் துரோகங்கள் என்ற அளவில் இதுவரை பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டிருந்த பெண்களுக்கு இது அடுத்தகட்ட கொடுமையாக முளைத்திருக்கிறது,

‘அவர்களை சும்மா விடக்கூடாது’ என்ற வார்த்தை ஓங்கி ஒலிக்கிறது என்றால் எப்படிப்பட்ட மனக் கொந்தளிப்பை இச்சம்பவம் கொடுத்துள்ளது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தங்கள் தரப்பில் குற்றமிழைத்தோர் இருப்பின்

அவர்களை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்குவதும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுமே ஆளுங்கட்சி செய்ய வேண்டிய முதல் வேலை.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை திருநாவுக்கரசு என்ற இளைஞன் மற்றும் அவனது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அதில் ஒரு பெண் விட்டுவிடுங்க அண்ணா என்று கெஞ்சியும் இரக்கமே இல்லாமல் பெல்ட்டால் அடிக்கும் வீடியோ மேலும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.

சுமார் 100 ற்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் சீரழித்த இவர்களின் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது

சிபிசிஐடி பொலிசார் நேற்று விசாரணையினை தொடங்கிய நிலையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்கள் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பல இளம்பெண்களை பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, இதேபோன்று ஆபாச படம், வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்துள்ளனர்.

பல பெண்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொலிசில் புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். சிலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

மேலும், பல மாணவிகள் அதிகார மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 10 ற்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த வழக்குகளை காவல் துறையினர் குடும்பப் பிரச்னை மற்றும் வியாதி காரணமாக தற்கொலை என முடித்து வைத்துள்ளனர்.

இப்படி எந்தெந்த வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலையும், பொள்ளாச்சி பகுதியில் கடந்த 7 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய பெயர் விவரத்தையும் சிபிசிஐடி பொலிசார் சேகரித்துள்ளனர்.

இதனால் இந்த சம்பவத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

எத்தகைய சூழலிலும் பாதிக்கப்பட்டவர்கள் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டுவிடக் கூடாது. ஒட்டுமொத்த சமூகமும் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய ஒரு தருணம் இது என்று தான் சொல்ல வேண்டும்.

சட்டம், அரசுசார் நடவடிக்கைகள் எல்லாமே குற்றங்களைக் குறைக்கவும் நம்முடைய ஆற்றாமைகளைக் குறைக்கவும் உதவலாமே தவிர, குற்றங்களை ஒழிக்க சமூகத்தின் மனதில் புரையோடியிருக்கும் நோய்க்கூறுகள் விடுபடுவதே வழி என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும்.

பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதிலிருந்தும், ஆணின் தவறுகளை ஏதோ ஒருவகையில் நியாயப்படுத்துவதிலிருந்தும் விடுபடாத வரை இத்தகைய கொடூரங்களிலிருந்து நம் சமூகம் விடுபடவே முடியாது.

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், வீடுகளிலிருந்து மாற்றங்கள் தொடங்க வேண்டும்.