மகிந்த பிரதமராகி இன்றோடு ஒருமாதம்! தீராத அக்கப்போரும் கலைக்கப்பட்ட ரணில் கனவும்!

அரசியல் குழப்ப நிலை முடிவின்றி தொடர்கிறது. ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு மகிந்தவை மைத்திரி நியமித்தார். அதிலிருந்து தொடரும் குழப்ப நிலைக்கு முடிவில்லாமல் போனது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இன்றுடன் (26) அவர் பதவியேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள்,வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன. பல நாடுகள் வாழ்த்துச் செய்தியைக் கூறாமல் இருந்துள்ளன.

இதுவொருபுறம் அரசிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

மகிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அது பின்னடைவையே வெளிப்படுத்துகிறது.

இதுவொரு புறம் இருக்க ‘என் வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது அவரது பொறுப்பின் கீழ் நடந்த, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த ஊழல், மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் மைத்திரி சூழுரைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்கவே தான் விரும்பியதாகவும், அவ்வாறு இல்லையெனில் இரண்டாவது தெரிவாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க விரும்பியதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இவர்கள் இருவரும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததால் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது மைத்திரிபால சிறிசேன இக்கருத்துக்களை முன்வைத்திருந்தார். அப்போது அவரிடம் முக்கியமான கேள்வி ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பதே அக் கேள்வி.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி,

ரணில் விக்ரமசிங்கவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் ஆகிய துறைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் இருந்தது.

ஜனாதிபதியாக இருந்தாலும் பிறரின் பணிகளில் தலையீடு செய்வதில்லை என்ற இணக்கத்தில் பணியாற்றினோம் என்று கூறினார்.

இதேகுற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி முன்வைப்பதாக செய்தியாளர்கள் கூறினார்.

அதற்கு அவர் இதனைக் கூற அவர்களுக்கு முதுகெலும்பிருக்கவில்லையா? என்று கேள்வியெழுப்பினார்.

இவ்வாறு ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.

மகிந்த பிரதமராகப் பதவியேற்று ஒருமாதம் ஆகியும் தீராத சண்டை தொடர்கிறது. நாளுக்கு நாள் புதுப் புது புரளிகளும் பிரச்சனைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இலங்கை அரசியல் ஆட்டம் கண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

-யாழருவிக்காக செந்தூரன்-