மக்களின் காணிகளிலுள்ள அகற்றப்படாத ஆபத்தான வெடி பொருட்கள்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அதனை அகற்றுமாறு கோரியிருந்தும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ் வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

வலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர், ராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அக் காணிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளுக்கும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் தமது காணிகளை விரைவாக துப்பரவு செய்து வரும் நிலையில் அங்கு இராணுவம் பயன்படுத்திய ஆபத்தான வெடி பொருட்கள் முழுமையாக அகற்றப்படாது காணப்டுகின்றது.

குறிப்பாக வீட்டின் கிணற்று நீர் தொட்டிகளுக்குள் போடப்பட்ட நிலையில் 16 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் மற்றும் வேறும் பல வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் இவ் வெடி பொருட்களை அங்கிருந்து அகற்றுமாறு பொது மக்கள் அப் பகுதி கிராம சேவகர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்திருந்தனர்.

எனினும் சித்திரை புத்தாண்டு காலம் என்பதால் அதனை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவ் அதிகாரிகள் தெரிவித்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணிகளானது கையளிக்கப்பட்டவுடனேயே இவ் வெடி பொருட்களை கண்ட பொதுமக்கள் அதனை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவை அகற்றப்படவில்லை.

குறித்த பொருட்களில் பல வெடி பொருட்கள் பழைய இரும்பு பொறுக்க வருபவர்களாலும் வேறு சிலராலும் களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப் பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்