மட்டக்களப்பு கடலில் நீராடச் சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு, புன்னைக்குடா கடலில் நீராடும் போது காணாமல்போன மாணவனொருவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கியுள்ள நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி- குமாரவேரலியார் கிராமத்தினைச் சேர்ந்த குபேந்திரன் ஹரிஸ்வரதன் என்ற 14 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐந்து மாணவர்கள் புன்னைக்குடா கடலில் நீராடுவதற்குச் கடந்த வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் நீராடி கொண்டிருக்கும்போது, ஒருவர் அலையில் அடித்துச் செல்லபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் அடித்துச் சென்றவரை மீட்க முடியாமல் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மகனை காணவில்லையென பெற்றோர் தொடர்ச்சியாக தேடுதலில் ஈடுபட்டிருந்தபோதே, கடலுக்கு குளிக்கச் சென்றமை தொடர்பாக ஏனைய மாணவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் குறித்த தகவலின் அடிப்படையில் புன்னக்குடா கடலில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.