மணப் பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம்! நெகிழ வைத்த தந்தையின் பாசம்

மகனின் திருமண ஆசையை நிறைவேற்ற தந்தை ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் செயற்பாட்டிற்கு சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 27 வயதான அஜய் பரோட் மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது சகோதரனின் திருமணத்தைக் கண்ட அஜய்பரோட், இது போன்ற திருமண விழா தனக்கு நடக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார்.

அதன் படி அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அஜய்க்கு திருமண ஏற்பாடுகளை தந்தை செய்துள்ளார். இதனால் ஒரு திருமணம் என்றால் என்னென்ன நடக்குமோ மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என திருமண விழா நடைபெற்றுள்ளது.

திருமண விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். எனினும் மணமகள் இன்றி இந்த திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணம் குறித்து அஜயின் தந்தை செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

மற்றவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் அஜய், அவரது திருமணம் குறித்து என்னிடம் கேட்டார், என்னால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை. அவருக்கு ஏற்ற ஜோடியை கண்டுப்பிடிப்பது கடினமானதாக இருந்ததால், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அஜய்க்கு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன் படி அவரது ஆசை நிறைவேற திருமணம் செய்து வைத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் மகனின் கனவை நிறைவேற்றி இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.