மர்ம நபரால் குழப்பம்! நுவரெலியாவில் தீவிர பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு

நுவரெலியாவில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை தேடும் வேட்டையில், நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (18) காலை முதல், இந்த நபர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார்.

நபரொருவர், நுவரெலியாவின் பிரபல உணவகமொன்று முன்னால், குளிர்பான போத்தலொன்றுடன் நடமாடிக்கொண்டிருந்தார்.

அதை வெகுநேரமாக அவதானித்த அங்குள்ள கடை உரிமையாளர் ஒருவர், இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நகரப் பகுதியிலுள்ள சி.சி.ரீ.வீ காணொளிகளைப் பரிசோதித்த பின்னர், அந்நபரின் நடமாட்டம் குறித்து அறிந்துகொண்டதாகவும் எனினும் தற்போது அவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நுவரெலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடம், பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள விகாரை, பிரதான தபால் நிலையம், புனித சேவியர் தேவாலாயம் மற்றும் நகர பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியாவில், இன்று காலை முதல், சந்தேக நபரொருவரின் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என, நுவரெலியா பொலிஸ் நிலைய புலன் விசாரணைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.