மார்ச் 19 போராட்டம்: இந்து இளைஞர் பேரவை பூரண ஆதரவு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நடைபெற்றவுள்ள கடையடைப்பு மற்றும் கவனயீர்பு பேரணிக்கு மட்டக்களப்ப மாவட்ட இந்து இளைஞர் பேரவை பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி வியாழக்கிழமை (14) மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்ககையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மார்ச் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு பேரணிக்கு எமது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பூரண ஆதரவை வழங்குகின்றது.

அன்றைய தினம் எற்பாடு செய்யப்பட்டுள்ள கடையப்பு போராட்டத்துக்கு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் ஆதரவு வழங்குமாறும் அரச தனியார் பேருந்து போக்குவரத்தை இடைநிறுத்தி பொதுமக்கள் பயணங்களை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்லடி பாலத்துக்கு அருகில் ஆரம்பமாகும் கவனயீர்பு பேரணியில் இன, மத மொழி வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.

இலங்கையில் யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் இடம்பெற்ற கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் திட்டமிட்ட குடியேற்றங்கள்,

தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் தொல்லியல் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுதல்,

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் போன்றன இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கையில் நடைபெற்ற மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் எதிர்வரும் 20ம் திகதி ஆராயப்படவுள்ளது.

இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினூடாக குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலில் ஒலிக்கவேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழருவிக்காக ந.குகதர்ஷன்