முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா..??

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

யுத்தக் குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது என்ற கருத்தினை ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரனும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த

இந்த யுத்தக் குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டு மொத்தமாக கேள்விக் குறியாக்கியுள்ளது.

சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது என்பதே நிதர்சனமாக உள்ளது.

சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

இதற்கு சான்றாகவே இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என்பதை பேசும் சர்வதேச இராஜதந்திரிகள் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை உற்றுநோக்கினாலே போதுமானது என்று தான் கூறவேண்டும்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருக்கின்றோம்.

அவர்கள் ஊடாக கையளிக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார்.

இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழும்புகின்றது?

இவ்வாறு பலமான கேள்விக் கணைகளை விடுகிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.

இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் சிறிலங்கா அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது ஏற்புடையதல்ல என்றே அவதானிகள் கூறுகின்றனர்.

மற்றுமொரு யுத்தக் குற்றவாளியாக சரத் பொன்சேகாவிற்கு பில்ட் மாஸ்டர் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

உண்மையில் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக் குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

எவ்வாறிருப்பினும் ஊர் உலகம் அறிந்த விடயத்தை மூடி மறைப்பது என்பது இயலாத காரியம்… முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா..??