மெல்பேர்ன் கன்பராவில் பெரும் பரபரப்பு! உத்தியோகத்தர்கள் வெளியேற்றம்

கன்பரா மெல்பேனில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் பொதிகள் தபாலில் அனுப்பப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டடங்களும் உடனடியாக மூடப்பட்டு அங்கிருந்த உத்தியோகத்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவமானது இன்று (09) நண்பகல் இடம்பெற்றுள்ளது. அவசர சேவைகள் பிரிவினர் தூதரக கட்டடங்களுக்கு விரைந்துள்ள அதேநேரம் பொலிசாரும் விசாரணைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை குறித்த மர்மப் பொதிகளில் என்ன இருந்தது என தெரியவில்லை.

இருப்பினும் பாகிஸ்தான் தூதரக பெண்ணொருவர் பொதியை திறந்து பார்த்தபோது அதில் மர்மமான தூள் காணப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற செய்தியொன்று தெரிவித்தது.

மேலும் மெல்பேர்னிலுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் உட்பட 5 வெளிநாட்டு தூதரகங்களுக்கு இவ்வாறான மர்ம பொதிகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

பின்னர் ஏனைய சில தூதரகங்களும் மெல்பேர்னில் தமக்கு இவ்வாறான மர்மப் பொதிகள் அனுப்பப்பட்டதை உறுதி செய்தமையைத் தொடர்ந்து,  கன்பராவிலும் பல தூதரகங்களும் தமக்கு வந்துள்ள மர்மப் போதிகள் குறித்து தெரிவித்திருந்தன.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மானி, கிறீக், தென்கொரியா, நியூஸிலாந்து, இந்தியா உட்பட சில தூதரங்களுக்கு இவ்வாறான மர்மப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

எனினும் இச் சம்பவத்தில் இதுவரைக்கும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில் பொலிசாரின் விசாரணைகள் கெடுபிடியாக உள்ளது.