ரணிலுடன் வெற்றியளிக்காத மைத்திரியின் அரசியல் பயணமும் அச்சத்தின் குறியீடாகப் பார்க்கப்படும் மகிந்தவும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலை பெரும் குழப்பதையே ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் அவதானிகளிடையேயும், ஒரு கிலி உணர்வு மக்களிடையேயும் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல நாடாளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவோ அல்லது அவரால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்கப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

இதனை தமிழ் மக்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன என்ற நிலை தோன்றியுள்ளது.

இதுவொரு புறம் இருக்க, தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சி என்பதை நினைவில் நிறுத்துகிறது முள்ளிவாய்க்கால் பேரவலம்.

ஆகவே மகிந்தவை ஏற்பதற்கு உணர்வுள்ள தமிழர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

மகிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர் அச்சத்தின் குறியீடாகவே உள்ளார். மேலும் கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள்.

இதனை முன்னிலைப்படுத்தி அச்சத்தின் குறியீடு மகிந்த என்று மங்கள சமரவீர கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆக மகிந்தவை ஏற்கும் மனம் இல்லை என்ற கூற்று ஒருபுறம் இருந்தாலும் மகிந்தவை ஏற்கத் தயாராகவும் இன்னொரு தரப்பினர் உள்ளனர்.

ஆக குழப்பம் நிறைந்த அரசியிலில் நடக்கப்போவது என்ன என்ற கேள்வியே முதன்மையாக உள்ளது.

– அலவன்-